செரிமான நலம் ஏன் உடல் இயக்கத்திற்கு முக்கியம்?
மூட்டு வலி என்பது வயது முதிர்வு அல்லது காயம் காரணமாக மட்டுமே ஏற்படும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் குடல் ஆரோக்கியத்திற்கும் மூட்டு ஆரோக்கியத்திற்கும் இடையே முக்கியமான தொடர்பு இருப்பதை காட்டுகின்றன. இதையே மருத்துவர்கள் "குடல்–மூட்டு தொடர்பு" (Gut–Joint Connection) என்று குறிப்பிடுகின்றனர். குடலில் வாழும் நன்மை தரும் நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படும்போது, உடலில் அழற்சி (Inflammation) அதிகரித்து, அது மூட்டுகளையும் பாதிக்கக்கூடும்.
நமது செரிமான மண்டலத்தில் கோடிக்கணக்கான நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவை உணவைச் செரிக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. மேலும், உடல் நலத்திற்கு அவசியமான குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (Short Chain Fatty Acids – SCFAs) போன்ற பயனுள்ள பொருட்களையும் உற்பத்தி செய்கின்றன.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அதிகமாக பதப்படுத்தப்பட்ட (Processed) உணவுகள், அதிக சர்க்கரை, அதிகளவு சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், மனஅழுத்தம், அதிக நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated Fats), புகைப்பிடித்தல், மது அருந்துதல் அல்லது நீண்டகாலம் தேவையின்றி ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படலாம்.
இதனால் குடலின் பாதுகாப்புச் சுவர் பலவீனமடைந்து, சில நச்சுப் பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் வளர்சிதை மாற்றப் பொருட்கள் ரத்தத்தில் நுழையலாம். இதனால் அழற்சி ஏற்பட்டு, முடக்குவாதம் (Rheumatoid Arthritis), தொற்றுக்குப் பிந்தைய மூட்டுவாதம் (Reactive Arthritis), குடல் அழற்சி நோய்களுடன் தொடர்புடைய மூட்டுவாதம் (IBD Arthritis), மூட்டு தேய்மானம் (Osteoarthritis) போன்ற நோய்களின் உருவாக்கத்திலும் தீவிரத்திலும் பங்கு வகிக்கக்கூடும்.
ஆரோக்கியமான குடலைப் பராமரிக்க, சமச்சீரான வாழ்க்கை முறையே அடிப்படை. நார்ச்சத்து நிறைந்த முழுத் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் விதைகள் ஆகியவை குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்க உதவுகின்றன. பெர்ரி வகைப் பழங்கள் போன்ற வண்ணமயமான பழங்களில் உள்ள இயற்கை பாலிபீனால்கள் (Polyphenols) குடல் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
தயிர், மோர், பழைய சாதம் மற்றும் அதன் நீர் போன்ற புளிக்கவைத்த உணவுகள் குடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன. வெந்தயம், சீரகம், பூண்டு, இஞ்சி, மஞ்சள், நெல்லிக்காய், கொத்தமல்லி, சோம்பு போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்கள் செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடியவை. இளநீர் உடலின் நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுகிறது; அளவோடு எடுத்துக்கொள்ளப்படும் தேங்காய்ப்பாலும் சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், கொட்டைகள் மற்றும் விதைகளில் உள்ள நல்ல கொழுப்புகள் உடலின் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
ஆயுர்வேதமும் பருவத்திற்கேற்ற இயற்கை உணவுகள், அளவான உணவு, மெதுவாக நன்றாக மென்று உண்பது போன்ற உணவுப் பழக்கங்களை செரிமான ஆரோக்கியத்தின் அடிப்படையாக வலியுறுத்துகிறது. இதையே நமது திருக்குறளும் அழகாக எடுத்துரைக்கிறது:
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றி உணின்."
அதாவது, முன்னர் உண்ட உணவு முழுமையாகச் செரித்த பிறகு, அளவோடு உணவை உட்கொண்டால் உடலுக்கு மருந்தே தேவையில்லை என்பதே இதன் பொருள். இத்தகைய உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் குடலில் பல்வகை நன்மை தரும் நுண்ணுயிரிகளைப் பாதுகாத்து, ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் மூட்டு ஆரோக்கியத்திற்கும் துணைபுரிகின்றன.
குடல் நுண்ணுயிரிகளை மாற்றிப் பொருத்தும் குடல் நுண்ணுயிரி மாற்று சிகிச்சை (Gut Microbiota Transplantation) போன்ற புதிய சிகிச்சை முறைகளும் சில தன்னைத்தானே தாக்கும் நோய்களில் (Autoimmune Diseases) பயன்படுமா என்பதை ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
இன்றே உங்கள் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ஆரோக்கியமான செரிமானம், குறைந்த அழற்சி, வலுவான மூட்டுகள் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு அது ஒரு முக்கிய முதலீடாக அமையும்— Dr Madura Prasad Suman
VGM Hospital, Trichy Road, Coimbatore